லண்டன்: உலக அளவில் பல்வேறு நாடுகளில் வளர்ப்புக் கோழிக்கறி விற்பனை செய்யும் பிரபலமான நிறுவனம் கே.எப்.சி. அடிக்கடி மோசமான உணவுவகைகளை கொடுத்து வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சந்திப்பது வழக்கமாகவே உள்ளது.தற்போது லண்டன் நகரத்தில் உள்ள அந்நிறுவனத்தின் கிளை விற்பனை மையம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
வாடிக்கையாளர் ஒருவருக்கு பொறித்த ருசியான கோழிக்கறி தருவதற்குப் பதிலாக வேகாத, அதுவும் கழிவாக தூக்கி எறியப்படும் கோழியின் கழிவுப் பொருட்களை,பரிமாறி கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது உலகத் தரமான கே.எப்.சி. நிறுவனம்.
சில மாதங்களுக்கு முன்னர், பன்னாட்டு உணவு நிறுவனமான கே.எப்சி-யின் கலிபோர்னியா மாநில கிளையில் கோழிக்கு பதிலாக எலியை பொறித்துக் கொடுத்த சம்பவம் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கோழிக்கு பதிலாக கோழிக் கழிவுகள் பரிமாறப்பட்டுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த கசாண்ட்ரா பெர்கின்ஸ் என்ற இளம்பெண், வெலிங்போராவில் உள்ள நார்த்தாண்ட் கே.எப்.சி. கிளைக்கு கடந்த 13ம் தேதி சாப்பிடச் சென்றுள்ளார். 6 பவுண்ட் செலுத்தி ஜிங்கர் டவர் மீல் எனப்படும் கோழி இறைச்சியையும் பர்கரையும் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த சில நிமிடங்களில் அவருக்கான உணவுத் தட்டு வந்தது. ஆனால் அதில் கோழிக்கறிக்குப் பதிலாக தூக்கி குப்பையில் வீசப்படும்,கோழியின் மூளை, இரைப்பை போன்ற கழிவுகள்தான் இருந்துள்ளது.அதுவும் வேகாத நிலையில்.
இது தொடர்பாக ஹாரிஸ் அளித்த பேட்டியில், “அது பிங்க் நிறத்தில் பார்க்கவே மிகக் கேவலமாக இருந்தது. நான் அதைத் தொடக்கூட விரும்பவில்லை. பார்ப்பதற்கு மூளை அல்லது நுரையீரலின் பச்சை மாமிசம் போல் இருந்தது. எனது பர்கரில் கூட தலைமுடி இருந்தது. பார்த்ததும் குமட்டிக்கொண்டு வந்தது. நிச்சயமாக என் வாழ்நாளில் இனி ஒரு போதும் இனி கே.எப்.சி உணவகத்தில் சாப்பிடவே மாட்டேன்.” என்று கூறியுள்ளார். இந்த விஷயங்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த ஜனவரி 13-ம் தேதி நடந்த இந்த விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்டுள்ள கே.எப்.சி நிர்வாகம் இது ஒரு விபத்து என்று குறிப்பிட்டுள்ளது.
“நீக்கப்பட வேண்டிய நேரத்தில் கோழியின் கழிவுகள் நீக்கப்படாமல் விடுவதால் சில எதிர்பாராத தருணங்களில் இது போன்ற தவறுகள் நடந்து விடுகின்றன. வருங்காலத்தில் உணவின் சுகாதாரம் குறித்து கூடுதல் அக்கறையுடன் இருக்குமாறு எங்கள் ஊழியர்களுக்கு நாங்கள் நினைவு படுத்தியுள்ளோம். அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள், உணவில் ஏதேனும் குறை இருந்தால் எங்களிடம் உடனடியாக தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளது.
இது போல தொடர்ந்து சம்பவங்கள் நடந்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் கே.எப்.சி. மீது கடும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Source: http://www.vikatan.com/news/world/58089-woman-claims-to-have-found-raw-giblets-in-her-kfc.art

